Monday, December 1, 2008

மழையால் நகரம் நரகமானது


மழை சென்னையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. ஒருவழியாக மழை நின்றாலும், ஏரி உடைப்பெடுத்து பல பகுதிகளில் வீடை விட்டு சென்ற மக்களை இப்பொழுதும் குடியேற விடமால் தடுக்கிறது.

வீட்டிற்குள் தண்ணிர் வராத, மாதத்திற்கு தேவையான மொத்த பொருட்களையும் வாங்கி வைத்திருக்கிற குடும்பங்கள் தப்பித்துவிட்டன. எல்லா மழையிலும் ஏழைகள் தான் நிறைய பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடம் வேலை செய்து, அதில் அரிசி, பருப்பு வாங்கி சமைத்து சாப்பிடுகிற குடும்பங்களின் நிலை கையறுநிலை தான்.

மின்சாரம் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் கூட நிறைய தட்டுப்பாடாகிவிட்டது. பால் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் சில பகுதிகளில் அரை லிட்டர் பால் 20 ரூபாயாம். எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம்.

ஏற்கனவே அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு என சிக்கித் தவித்த மக்கள் தான் சிறுக சிறுக சேமித்த கொஞ்ச பொருட்களையும் இந்த மழை கொண்டு போய்விட்டது.

எல்லாவற்றையும் இழந்து தலைவிரி கோலமாய் நிற்கிற மக்களை பார்க்கும் பொழுது, காண சகிக்கவில்லை. துயரம் தான் பீறிட்டு எழுகிறது.

பிரச்சனைகள் வருவதற்கு முன் காப்பாற்றுகிற அரசு மக்கள் நலன் நாடு அரசு எனலாம். செத்தப் பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய வருகிற அரசை என்ன சொல்வது?

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு, அரசு 10 கிலோ அரிசியும், ரூ. 2000 பணம் என அறிவித்து இருக்கிறது. மழையில் அல்லாடுகிற மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு, இந்த இழப்பீட்டு பணத்தை அமுக்க எத்தனை பிரயத்தனப்படுகிறார்கள் என இனி பார்க்கத்தான் போகிறோம்.

நகரம் வளர்ச்சியடைவதாக சொல்கிறார்கள். வேதனை கலந்த சிரிப்பு தான் வருகிறது. உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் சரியாக ஊட்டம் போய் சேர்ந்தால் அது ஆரோக்கியம். ஒரு இடத்தில் குவிந்தால் அது வளர்ச்சி இல்லை. வீக்கம் . உடனடியாக மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டிய நோய். இந்த நோயை குணப்படுத்தாமல், பெரும்பான்மை மக்களுடைய துயர மழை நிற்க போவதேயில்லை.

No comments: