Friday, December 5, 2008

பெட்ரோல் விலை குறைப்பும் இறக்க முடியாத விலைவாசியும்!


டிசம்பர் இறுதியில் தான் விலை குறைப்போம் என திமிர்தனமாக அறிவித்த அரசு, பெட்ரோல் விலை குறைப்பிற்காக நாடு முழுவதும் எழுந்துள்ள பல போராட்டங்களுக்கு பிறகு விலை குறைத்துள்ளார்கள். அதிலும், கண்டிசன் அப்ளை என்கிற சில நிபந்தனைகளுடன்.

உலகச் சந்தையில் கச்சா பேரல் உயரும் பொழுதெல்லாம், இங்கு விலை ஏற்றியவர்கள் 47 டாலருக்கும் கீழாக குறைந்த பிறகும், குறைக்க மனது வர மறுக்கிறது. இது ஒரு பிரச்சனை. இதற்கு பின்னணியில் வேறு ஒரு பிரச்சனையும் எழுகிறது. இந்த நிலையற்ற தன்மையில் பாதிக்கப்படுவது பெரும்பான்மை மக்களே!

ஒரு உணவகத்தில் வழக்கமாக சாப்பிடுவேன். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை டீ-யின் விலை ரூ. 3. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 4. இரண்டு நாள்களுக்கு முன்பு, ரூ. 5 என மாற்றிவிட்டார்கள். இதே நிலை தான், அந்த உணவகத்தில் உள்ள எல்லா வகைகளுக்கும்.

இந்த கடுமையான விலைவாசி உயர்வுக்கு பல காரணங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும் ஒரு காரணம்.

இப்பொழுது, விலை குறைந்திருக்கிறது. அதன் எதிரொலிப்பு விலைவாசி குறைய வேண்டுமல்லவா! குறையாது. மொத்தத்தில் அவஸ்தைபடுவது மக்கள் தான்.

இந்த வருட துவக்கத்தில் நான் வாங்கிய சம்பளத்தின் மதிப்பு இன்றைக்கு 30% குறைந்திருக்கிறது. பல்வேறு செலவுகளை குறைத்து தான் சென்னையில் வாழமுடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு ஜனவரியில் தான் இருக்கும். நிலவுகிற பொருளாதார மந்த நிலையில் எல்லா முதலாளிகளும் நெருக்கடியில் இருக்கிறார்களாம். இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது என இப்பொழுதே அறிவித்து விட்டார்கள்.

வேறு அலுவலகத்திற்கு நகரலாம் என்றால், பல அலுவலங்களிலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாக பழக்கத்தில் H.R. கள் தெரிவிக்கிறார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில், இருக்கிற வேலையை காப்பாற்றிகொள்வது தான் புத்திசாலித்தனம் எனவும் ஆலோசனை சொல்கிறார்கள்.

முதலாளிகளின் நெருக்கடி தொழிலாளிகளுக்கு நேரடியாக இறங்குகிறது. ஆனால், என்றைக்கும் தொழிலாளர்களின் நெருக்கடி முதலாளிகளை பாதிப்பதேயில்லை.

1 comment:

தீபக் வாசுதேவன் said...

கரும்புச் சாறு ஒரு வருடம் முன்பு தி.நகர் ரங்கனாதன் தெருவில் மூன்று ரூபாய். இப்போது அதே கடையில், ஏழு ரூபாய். இது எப்படி இருக்கு?