Tuesday, July 5, 2011

மனிதர்கள் 6 - மதி!


இரவு 9 மணி. அந்த அறையில் சிறுசிறு பிரசுரங்கள் ஆங்காங்கு இருந்தன. பகுதி பிரச்சனையை விளக்கி, எழுதப்பட்ட தட்டி போர்டுகளும் ஓரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. மார்க்சிய ஆசான்களின் புத்தகங்கள் செல்ப்பில் சீராக‌ அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அந்த அறையின் மூலையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு காத்திருந்தன. பசை காய்ச்சி, சூடாக ஒரு வாளியில் தயாராக இருந்தது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, முழக்கங்கள் சுவரொட்டியில் இருந்தன. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் விடிகாலைக்குள் அனைத்தும் ஒட்டப்பட வேண்டும்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அறிவிக்கப்படாத அலுவலகமாக அந்த அறை இயங்கி கொண்டு இருந்தது.

இருவர் ஒட்டுவதாக இருந்தது. ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை. என்ன செய்வது? யாரை அழைக்கலாம்? யோசித்ததில் அகமதுவின் நினைவு வந்தது. உணர்வுபூர்வமானவர். சமீபத்தில் தான் அமைப்புக்கு அறிமுகமானவர். அவரைச் சந்தித்து, பேசி அவரை அழைத்து சென்றார் பாண்டி.

****

நடுநிசி 3 மணி. எவ்வளவு விரைவாக ஒட்டியும் இன்னும் சில சுவரொட்டிகள் மீதமிருந்தன. நாய்களின் குரைப்பு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது அந்த பகுதியில் சுற்றி வந்த ஒரு போலீஸ் ஜீப் அவர்கள் அருகில் வந்து நின்றது. "ஓ! நீங்க தான் இந்த போஸ்டரை ஒட்டுகிட்டு வருகிறார்களா!" என சொல்லியபடியே, 'அரசை எதிர்த்து ஆவேசமான வார்த்தைகள் இருந்ததாக" இருவரையும் கைது செய்தார்கள்.

****

கைது செய்யப்பட்ட தகவல் சம்பந்தபட்ட பகுதி பொறுப்பாளருக்கு வந்தது. முதலில் இரண்டு பேர்களுடைய வீட்டிற்கும் தெரியப்படுத்த வேண்டும். பாண்டி வீட்டில் தெரியப்படுத்திவிடலாம். ஏற்கனவே சிலமுறை சிறை சென்றவர். அகமது வீட்டில் தெரியப்படுத்துவது தான் பிரச்சனை. அகமதுவை அழைத்து செல்கிறேன் என முன்பே தெரியப்படுத்தியிருந்தால், "வேண்டாம்" என முன்பே தவிர்த்திருக்கலாம். இப்பொழுது நிலைமை கைமீறிவிட்டது.

அகமது காதல் திருமணம் முடித்தவர். பெண் இந்துமதத்தைச் சேர்ந்தவர். இரு வீட்டாருமே இவர்களின் காதலை ஏற்கவில்லை. இருவரும் உறுதியோடு இருந்தார்கள். தோழர்கள், நண்பர்கள் உதவியுடன் தான் திருமணமே நடைபெற்றது.

இப்பொழுது அகமதுவின் மனைவி நிறைமாத கர்ப்பிணி. அடுத்தவாரம் பிரசவம் என நாள் குறித்திருந்தார்கள். ஆனால், இன்றைக்கும் இரு வீட்டாரும் கோபம் தணிந்து பேசவில்லை. ஆகையால், துணைக்கு யாருமில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் போய் "கணவர் கைது" என்ற விசயத்தை சொல்வது, மிகவும் மன உளைச்சலுக்குரிய விசயம். வேறு வழியில்லை. சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு பெண் தோழரையும் உடன் அழைத்து கொண்டு, தோழர் வீட்டிற்கு போனார்.

*****

அகமதுவின் மனைவியிடம் தயங்கி தயங்கி ஆரம்பித்தார்.

"நேற்றிரவு சுவரொட்டி ஒட்டப்போன தோழரோடு, உங்க கணவரை போலீஸ் கைது செய்துவிட்டது" என்றார்.

அதிர்ச்சி ஆகாமல் "கொண்டு போன எல்லா போஸ்டரையும் ஒட்டிட்டாங்களா?" எனக் கேட்டார்.

தோழர் அதிர்ச்சியடைந்துவிட்டார். அழுவார்கள் அல்லது திட்டுவார்கள். எப்படி ஆறுதல்படுத்துவது என நினைத்து போனவரிடம், இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. சுதாரித்து "ஒட்டி முடிக்கும் பொழுது கைது செய்திருக்கிறார்கள்" என்றார்.

"இரண்டு நாள்ல வந்துருவாங்கல்ல! நீங்களெல்லாம் இருக்கீங்கள்ல! எனக்கு ஒண்ணும் பயமில்லைங்க!" என்றார்.

உடனிருந்த பெண் தோழர் கேட்டார். "உங்க பெயர் என்ன?"

"மதி" என்றார்.

தைரியம் சொல்ல போனவர்கள், உற்சாகம் பெற்று வெளியே வந்தார்கள்.

No comments: