Monday, September 19, 2011

மனிதர்கள் 10 - பாரதி


நண்பனின் அண்ணி இராதா பற்றி எழுதி பகிர்ந்த பொழுது, அடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டிய மனுசி பாரதி என முடிவெடுத்தேன். கசப்பு மருந்து சாப்பிட்டால், உடனே நாக்கு இனிப்பு தேடும் அல்லவா! அது போல!

****

ஆசிரியர் நண்பர் ஒருவர், எனக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என ஆர்வமாய் இருந்தார். அவசரத்திற்கு காரணம், மணல் கயிறு எஸ்.வி. சேகர் போல நானும் சில நிபந்தனைகளை அவரிடம் சொல்லியிருந்தேன். இந்த நிபந்தனைகளின்படி என் பெற்றோர்களால் எனக்கு பெண் பார்க்கமுடியாது என உறுதியாய் நம்பினார். இப்ப தேடினால் தான், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளிலாவது முடியும் என்றார். கல்யாணம் செய்யுமளவிற்கு நிதானம் வந்ததாய், என்மீது எனக்கே நம்பிக்கையில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

****

அவருடைய டிவிஎஸ் 50 யில் என்னை வலுக்காட்டாயமாக இழுத்துக்கொண்டு போனார் என்று தான் சொல்ல வேண்டும். பெண் பார்க்க போய்கொண்டிருக்கிறோம். எனக்கு விருப்பமே இல்லை. சம்பிரதாய பெண் பார்த்தல் கூடாது. பஜ்ஜி, சொஜ்ஜியெல்லாம் சாப்பிடமாட்டேன் என்ற நிபந்தனையை ஞாபகப்படுத்தினேன். அதெல்லாம் பிரச்சனையே இல்லை. அந்த வீட்டில் அந்த பெண் மட்டும் தான் இருப்பார். எதைச்சையாய் வருவதாய் தான் சொல்லியிருக்கிறேன். நான் பேச்சுக்கொடுக்கிறேன். பிடித்திருக்கிறதா! என சொல் என்றார். பார்த்துவிட்டு, பிடிக்கவில்லை என சொல்லிவிட வேண்டியது தான்! என நினைத்துக்கொண்டே போனேன். பெயர் என்ன? பாரதி என்றார். பெயர் பிடித்திருந்தது.

****

பாரதி மாநிறமாய் இருந்தார். அக்காவின் குட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தார். நண்பர் சில கேள்விகள் கேட்க, பாரதி பதிலளிக்க, இந்த உரையாடல்களில் பாரதியை பிடிக்காமல் போய்விட்டது. காரணம் : தொழிற்கல்வியில் தான் ஆர்வம். அம்மாவின் வற்புறுத்தலில் தான் பி.காம்.மை தபால் வழியில் படித்துவருகிறார். சுறுசுறுப்பில்லாமல் அசமந்தமாய் இருந்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லவேண்டும் என்பது என் நிபந்தனைகளில் ஒன்று. பாரதி வேலைக்கு செல்லமாட்டார் என உணர்ந்தேன்.

திரும்பும் பொழுது, பிடித்திருக்கிறதா? என்றார். 'பிடிக்கவில்லை' என்றேன் உடனே!

****

இரண்டு வாரக் காலத்தில் பாரதியை சுத்தமாய் மறந்துபோயிருந்தேன். இதற்கிடையில், என்னிடம் சொல்லாமலே, பாரதியையும், அவர் அம்மாவையும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பாரதி பளிச்சென்று இருந்தார். அன்று பார்த்த பாரதி வேறு! இன்று பார்க்கும் பாரதி வேறு! தன் நிறத்திற்கு ஏற்ற ஒரு நல்ல உடை. புன்முறுவலான முகம். பாரதி அம்மாவிடம் நண்பர் அறிமுகப்படுத்தினார். பாரதியின் அம்மா என் குடும்பம் குறித்து, வேலை குறித்து சில கேள்விகள் கேட்டார். பதில் சொன்னேன்.

தனியாக பாரதியும் நானும் 15 நிமிடம் பேசினோம். பாரதிக்கு என்னிடம் கேட்பதற்கு ஏதும் கேள்விகள் இல்லை. நான் தான் சில கேள்விகள் கேட்டு பேசினேன். பிறகு கிளம்பினார்கள்.

பாரதியின் அம்மாவும், அப்பாவும் காதல் திருமணம் முடித்தவர்கள். அப்பா ஒரு சிறிய தொழில் நடத்திவருகிறார். அம்மா ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை செய்கிறார். பெண் வேறு சாதி இருக்கவேண்டும். சாதி மறுத்த தம்பதிகளோ, காதல் தம்பதிகளின் பெண்ணோ இருந்தால் நல்லது என்ற நிபந்தனை பாரதி விசயத்தில் பொருந்தி வந்தது.

இந்தமுறையும், "பிடித்திருக்கிறதா?" என்றார். 'பிடித்திருக்கிறது' என்றேன்.

****

நாலு நாள் கழித்து, நண்பர் சோகமாய் சொன்னார். பாரதி பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாக தெரிவித்தார். மவனே நீ முதலில் பிடிக்கவில்லை என்றாய். இப்பொழுது பாரதி பிடிக்கவில்லை என்கிறார். சரியாக போயிற்று! அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் பாரதியை மறந்து போனேன்.

****

பத்து நாள்கள் கழித்து, ஒரு நாள் மதியம் போன் வந்தது. பேசியது யாரென அறிந்தால், நீங்களே ஆச்சர்யம் அடைவீர்கள் "பாரதி". 'நல்லா இருக்கிங்களா?" என்றார். நானும் நலம் விசாரித்தேன். சொல்லுங்க! என்றேன். "உங்ககிட்ட பேசணுமே!' என்றார். "பிடிக்கவில்லை என சொன்னதாக நினைவு?" என நினைவுப்படுத்தினேன். "அதுவா! எனக்கு கல்யாணம் தான் வேணாம்னு சொன்னேன். உங்களை பிடிக்கலைன்னு சொல்லலையே! (அதானே பார்த்தேன்!) இப்பத் தான் எங்க அம்மாச்சியை பார்த்து பேசினேன். உனக்கு பிடிச்சிருந்தா, கட்டிக்க என சொன்னார்" என்றார்.

'எங்க சந்திக்கலாம்? நீங்களே ஒரு இடம் சொல்லுங்க!" என்றேன் நல்ல பிள்ளையாய்! இரண்டு மூன்று இடங்களை சொன்னவர், இறுதியில் எங்க வீட்டுக்கே வந்துடுங்களேன்!" என்றார்.

வீட்டுக்கு போனேன். பாரதி புன்சிரிப்புடன் வரவேற்றார். அப்பா உம்மென உட்கார்ந்திருந்தார். அம்மா சங்கடமாய் வரவேற்றதாய் உணர்ந்தேன். பேசுவதற்கான சூழல் அங்கு நிச்சயம் இல்லை. "மாடிக்கு போகலாமா!" என்றார் பாரதி. போனோம்.

'சொல்லுங்க! என்னாச்சு இந்த பத்து நாள்களில்? ஏன் இவ்வளவு குழப்பம்?"

"உங்களைப் பார்த்து பேசிவந்த பிறகு, எனக்கு கல்யாணம் வேண்டாம் என்றேன். பிடிக்கவில்லை என்பதாய் புரிந்துகொண்டார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னைக்கு போய், ஒரு மாப்பிள்ளைப் பார்த்து, பிடித்துவிட்டதால், உறுதியளித்து வந்திருக்கிறார்கள்" என்றார்.

மாப்பிள்ளை பற்றிய விவரம் கேட்டேன். சொன்னார். "அந்த மாப்பிள்ளை பிடிச்சிருந்தா, கல்யாணம் செய்துகொள்ள வேண்டியது தானே?" என்றேன்.

"அவங்க வரதட்சணையாக 20 பவுன் வரை கேட்கிறார்கள்.எனக்கு பிடிக்கவில்லை. " என்றார்.

வரதட்சணை வாங்கமாட்டேன் என்ற என் நிபந்தனை நினைவுக்கு வந்தது.

பாரதியே தொடர்ந்தார். "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அக்காவை கட்டிக்கொடுத்தோம். இப்பொழுது கடந்த ஒரு வருடமாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது, மீண்டும் என் கல்யாணத்திற்கு கடன் என்றால், அம்மா, அப்பா நிறைய கடன்படுவார்கள். சிரமப்படுவார்கள். அதனால் தான்!" என்றார். அம்மா, அப்பாவை நேசிக்கிற பாரதியை அந்த நிமிசத்தில் நிறைய பிடித்தது.

"புரியுது! இப்ப நான் என்ன செய்யவேண்டும்?" நேசமான புன்னகையுடன்!

"அம்மா, அப்பாவுடன் நீங்கள் பேசுங்கள்" என்றார்.

"வரதட்சணை இதெல்லாம் விடுங்கள். என்னை உண்மையிலேயே பிடித்திருக்கிறதா?" என்றேன்.

"பிடித்திருக்கிறது!" என்றார் முகமலர்ச்சியுடன்!

"சரி அம்மாவை கூப்பிடுங்க!" என்றேன்.

பாரதியை முறைத்துக்கொண்டே மேலே வந்தார். "என்னாங்கம்மா?" என்றேன். பாரதி சொன்ன விவரங்களை அவர் வார்த்தைகளில் சொன்னார். சென்னைக்கு போய் பார்த்து, பேசி வந்த பிறகு, உங்களை இப்ப வரச்சொல்லியிருப்பதால், அவங்க அப்பா கீழே கோபமாய் அமர்ந்திருக்கிறார்!" என்றார்.

"சரிங்கம்மா! பாரதி வரச் சொன்னாங்கன்னு வந்தேன். எனக்கு பாரதியை பிடிச்சிருக்கு! பாரதியும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க! உங்க இரண்டு பேர் மீது, நிறைய அன்பும், மரியாதையும் வைச்சிருங்காங்க! பெண்ணோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க! இனிமேல் குடும்பத்துல பேசி நீங்க தான் முடிவெடுக்கனும். என்ன முடிவு என்றாலும், தயங்காமல் தெரியப்படுத்துங்கள்!" என கிளம்பினேன்.

****

மூன்று நாட்கள் கழித்து, மதிய வேளையில் பாரதியின் அம்மா பேசினார்.

"அவங்க அப்பா சென்னை சம்பந்தத்தில், உறுதியாய் இருக்கிறார். மன்னிச்சுங்க" என்றார்.

பாரதியின் புன்னகையான முகம் ஒருமுறை வந்து போனது. "வாழ்த்துக்கள் பாரதி" என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.

****

3 comments:

Anonymous said...

simple and nice

satya

போராட்டம் said...

:-) வித்தியாசமான அனுபவம்தான். தொடருங்கள்.

வேடபட்டி சிவக்குமார் said...

அய்யா நொந்தகுமார்,
வெளிப்படையாக எழுதும் உங்கள் இயல்பான எழுத்து நன்றாக இருக்கிறது. புத்தகங்கள் என்றால் யாரவது ஒருவருடைய அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு நல்ல, கேட்ட அனுபவங்களின் தொகுப்பு அவசியம். உங்கள் பேருந்து கதை படித்த பிறகு, பேருந்தில் இனி நான் தூங்க மாட்டேன் அல்லது அந்த ஊருக்கே செல்லும் பேருந்தில் தான் ஏறுவது என முடிவு செய்துவிட்டேன்.

நன்றி நண்பரே