Tuesday, December 27, 2011

மெளனகுரு - உண்மையை சத்தமாய் பேசிய படம்!


கடந்த வாரம் இந்த படத்தைப் பார்க்கப்போய்த்தான், இரவு காட்சி மட்டும் என்று சொல்லி, மிஷன் இம்பாசிபிள்-4ல் மாட்டிக்கொண்டேன். பெரிய நட்சத்திர படங்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் திரையரங்குகளை இயக்கும் செல்வாக்கில், பல சிறிய தயாரிப்பு படங்கள் சிக்கி கொள்கின்றன. அதில் இந்த படமும் ஒன்று. நல்ல படம் என மக்களை சென்றடைவதற்குள்ளேயே பல திரையரங்குகளில் எடுக்கப்பட்டுவிட்டன. ஒரு பேட்டியில் இயக்குனர் சேரன் சொல்வது போல, இப்பொழுது பல படங்களுக்கும் வாழ்வு ஒரு வாரம் தான்.

****

கதை எனப் பார்த்தால்....

நெடுஞ்சாலையில் கார் பாறையில் மோதி ஒரு சாலைவிபத்து. உயர் அதிகாரிகளுடன் ஒரு காவல்துறை குழு வந்து பார்வையிடும் பொழுது, காரில் உள்ள சூட்கேஸில் நிறைய பணம் இருக்கிறது. காவல்துறையின் குறுக்குப்புத்திகள் கூட்டாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. பணத்தை கமுக்கமாய் அமுக்க முடிவு செய்கிறார்கள்.

ஒரு குற்றம் பல குற்றங்களுக்கு அவர்களை இழுத்து செல்கிறது. இந்த களேபரத்தில் (நாயகனான) மாணவன் மாட்டிக்கொள்கிறான். உண்மை தெரிந்த இவனை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். கடைசி நேரத்தில் தப்பி, பிறகு மீண்டும் மாட்டி, மனநலம் பிசகியுள்ளதாக மனநல மருத்துவனைக்குள் சிறை வைக்கிறார்கள். அதிலிருந்து அவன் மீண்டானா? என்பது சொச்சகதை!

****

கதையை நம்பி, திரைக்கதையை வலுவாக அமைத்தால், திரைப்படம் அருமையாக வரும் என்பது ஒரு நல்ல உதாரணம் இந்த படம். எல்லா கதாபாத்திரங்களும் சரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இயல்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. கதை மெல்ல மெல்ல விரிந்து, கதைக்குள் நம்மையும் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. இயக்குநருக்கு முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யமாய் இருக்கிறது.

***

புரியாத புதிர், முரண் - என சில வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படி நல்ல திரில்லர் படங்கள் வெளிவருகின்றன. அந்த படங்களைவிட இந்த படத்திற்கு உள்ள சிறப்பு என்னவென்றால், சமூகத்தில் உள்ள பல கோளாறுகளை இயல்பாக தொட்டு செல்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறு எந்த அளவுக்கு அப்பாவிகளை பாதிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக படம் நமக்கு சொல்கிறது. நமது முதலமைச்சர் ஜெ. சொல்வது போல, காவல்துறைக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தால், என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்.

படத்தினூடாக ஆங்காங்கே குட்டி குட்டி சம்பவங்கள், கதைகளும் உண்டு.

சாலையோரத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரை காவல்துறை அதிகாரி அடித்துவிடுகிறார். புகார் கொடுக்கும் பொழுது, காவலர் "நீங்க பேராசிரியர்னு தெரியாது சார்!" என சொல்லும் பொழுது, "கருப்பா இருந்து, கைலி கட்டியிருந்தா அடிப்பீங்களோ!" என்பார் கோபமாய்!

ஒரு கல்லூரி முதல்வர் தன் மகனை நன்றாக படிக்கும் பசங்களோடு ஒப்பீட்டு, தினமும் திட்டும் பொழுது, அந்த பையனின் ஆளுமை சிதைவதை நன்றாக உணர்த்தியிருக்கிறார்கள். அதே போல், அந்த முதல்வர் தன் கெளவரத்தை காப்பாற்றுவதற்காக செய்யும் நடவடிக்கைகள் எவ்வளவு பின்விளைவுகளை உருவாக்குகிறது என்பதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள்.

மனநல மருத்துவ இன்சார்ஜை, "நல்லா இருக்குற என்னை, ஏன் மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டாய்? என நாயகன் கோபமாய் கேட்கும் பொழுது, "மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், ஒருவர் இறந்துவிட, காவல்துறை உதவி செய்தது. அதற்கு கைமாறாக இந்த உதவி!" என்பார்.

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நேர்மையான அந்த கர்ப்பிணியான பெண் ஆய்வாளர் ஒரு கொலை கேஸை ஆய்வு செய்வது மிக அழகு.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

****

டெயில் பீஸ் : பேரனின் இந்த படப்பெயரை வைத்து, கருணாநிதியை கடந்த வாரம் கலாய்த்த மதியின் கார்ட்டூன் அருமை.

மேலே சொன்ன கருத்து, "காவல்துறைக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தால், என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்" யாருக்காவது அதிகப்படியானது என நினைத்தீர்கள் என்றால், கீழ்க்கண்ட உண்மை நிகழ்வான சுட்டியை படிப்பது நல்லது.

காவல்துறையால் நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும், பின் நிகழ்வுகளும்!

Friday, December 23, 2011

பெயரில் மட்டும் இராஜபாட்டை!


நேற்று ஊருக்கு கிளம்பிகொண்டிருந்தேன். நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. "இராஜபாட்டை ஒரு டிக்கெட் இருக்கிறது. போகிறாயா?" என்றான். "இல்லப்பா! நான் ஊருக்கு போகிறேன். நல்லாயிருந்தா பிறகு பார்த்துக்கொள்கிறேன்" என்றேன்.

ஊருக்கு இரவு 9.30க்கு போய் சேர்ந்தேன். நண்பன் இராஜபாட்டைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். கூப்பிட்டான். வரவில்லை என்றேன். "வாப்பா! பேச்சுத்துணைக்கு! என இழுத்துச்சென்றான். இராஜபாட்டை தன் வலைக்குள் இழுப்பதாக உணர்ந்தேன்!
****
கதை எனப்பார்த்தால்...

நில மோசடி தான்! சொர்ணஅக்கா போல் ஒரு பெண் அரசியல்வாதி தமிழ்நாடு முழுவதும் பல சொத்துக்களை தன் அரசியல், ஆள் பலத்தால் கைப்பற்றுகிறார். 25 ஏக்கரில் ஒர் அனாதை ஆசிரமம் சென்னையில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறது.அதையும் கைப்பற்ற நினைக்கிறார்.

அனாதை ஆசிரமத்தின் நலனிற்காக, அதன் சொந்தக்காரரை ஸ்டண்ட் நடிகராக இருக்கும் நாயகன் பாதுகாக்கிறார். இருந்தும், பல வேலைகள் செய்து வில்லன் கும்பல் இடத்தை எழுதி வாங்கிவிடுகிறது. அனாதை ஆசிரமம் காப்பாற்றப்பட்டதா? என்பது க்ளைமேக்ஸ்!
*****

எப்பொழுதும் முடிவை வெண்திரையில் காண்க! என முடிப்பார்கள். ஆனால், அப்படி எழுத மனம் வரவில்லை. ஏனென்றால், படம் அப்படி ஒரு சொதப்பல்.
****

இருக்ககூடிய எல்லா ஓட்டுக்கட்சி பிரமுகர்களும் செய்கிற காரியம் நிலமோசடி. அதிமுக தனது பழிவாங்கல் நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக திமுகமீது பல வழக்குகளை போட்டு தாக்கிகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்து நன்றாக கையாண்டிருக்கலாம். படுமோசமான திரைக்கதையால், இரண்டு மணி நேர படம், மூன்று மணி நேரம் போல ஆயாசம் தருகிறது. எந்த காட்சியிலும் அழுத்தம் இல்லை. பல காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. கதையில் கோர்வை இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரெம்ப வீக். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல எடுத்த சுசீந்திரன் படமா என ஆச்சர்யம் வருகிறது.
****

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஒன்றாய் வெளியிட மெனக்கெடுகிறார்கள். அதனாலேயே எல்லா கோளாறுகளும் படத்திற்குள் வந்துவிடுகின்றன. அதிக சண்டைகள். பொருந்தாத இடத்தில் பாடல்கள்.
சண்டை படங்கள் கொஞ்சம் அடங்கி இருந்தது. கதையம்சம் கொண்ட படங்கள் கொஞ்சம் வர ஆரம்பித்தன. ஒஸ்தி, இராஜபாட்டையின் வரவுகள் கவலை கொள்ள வைக்கின்றன.

ஒஸ்திக்கு தலைப்பு "மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுல்ல!" என்றார் அதிஷா. இராஜபாட்டை ஒஸ்தியை விட மொக்கை!
****

Thursday, December 22, 2011

மிஷன் இம்பாசிபிள் 4 - திரைப்பார்வை


மூன்று திரயரங்குகள் கொண்ட வளாகம் அது. நான்கு காட்சிகள் என சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள். நம்பி போனோம். இரவு காட்சி மட்டும் தான் என்றார்கள். நெருக்கடியில் நண்பரின் விருப்பத்தின் பேரில் இந்த படம் பார்த்தேன்.

***

ஐ.எம்.ப் (The International Monetary Fund) ஐ சார்ந்த கதாநாயகன் இயங்கும் உளவுக்குழு ஒன்று, ஒரு பயங்கரவாதியை தேடுகிறது. அணுகுண்டால் அமெரிக்காவை தாக்க செய்ய திட்டமிடுகிறான். வெடிக்க வைப்பதற்கான கோடை (Code) ரசியாவிடமிருந்து திருடுகிறான். திருடியது தெரியாமல் இருப்பதற்காக, பிரமாண்ட கிரம்ளின் மாளிகையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கிறான்.

இந்த வெடிவிபத்துக்கான பழி உளவு குழு மீது விழுகிறது. அவர்களின் நிலை மிகவும் சிக்கலாகிறது. மேலிருந்து எந்த உதவியும் கிடைக்க வழியே இல்லை. இந்த பழியைப் போக்க, தங்கள் உயிரை பணயம் வைத்து, இறுதியில் பயங்கரவாதியை கொல்கிறார்கள். ஏவப்பட்ட அணுகுண்டை செயலிழக்க வைக்கிறார்கள். அமெரிக்காவை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காக்கிறார்கள். முடிவு சுபம். குழு அடுத்த மிஷனுக்கு தயாராகிறது.

***

சில விசேஷ விளம்பர படங்களைப் பார்த்தால், சில விசயங்கள் புரியாது. 10 முறை பார்த்தால் தான் விளங்கும். அது போல இந்த படமும்! துவக்கம் முதல் இறுதி வரை விறு விறுவென போகிறது. எங்கும், எப்பொழுதும் நிதானிக்காமல் ஒடிக்கொண்டெ இருக்கிறது. ஆகையால், கதை கூட குன்சா தான் புரிகிறது. ஆக்சன் படம் என்பதால், அதில் பார்வையாளனுக்கு புரிய வைப்பதற்கு அவர்கள் மெனக்கெடவே இல்லை. மேலும், இது நாலாவது பாகம் என்பதாலும் இருக்கலாம்.

***

படம் சொல்லும் கதையை பரிசீலித்தால், நடைமுறை உண்மையெனில், அமெரிக்காவும், ஐ.எம்.எப்.மும் ஏகாதிபத்திய அரசுகளின் சொல்பேச்சு கேட்காத, உலக தலைவர்களை போட்டுத்தள்ளுகிறது. தங்கள் கொள்ளைக்காக பயங்கரவாதிகளை உருவாக்குகிறது. பிறகு, சில காலங்களுக்கு பிறகு போட்டும் தள்ளுகிறது. இந்த இடைவெளியில் எண்ணெய் வளம் போன்ற பல விசயங்களில் பல பில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஜனநாயக ஆட்சி உருவாக்குகிறோம் என்ற பெயரில் நாட்டை ஆக்ரமித்து, தங்களது எடுபிடிகளை கொண்டு பொம்மை ஆட்சிகளை உருவாக்குகிறார்கள்.

உண்மை இதுவாக இருக்க, உலகத்தை பல இன்னல்களிலிருந்து இவர்கள் தான் மக்களை காப்பது போல, ஹாலிவுட் படங்கள் நமக்கு கதையளக்கின்றன. நாமும், சந்தோசமாய் பார்த்து மகிழ்கிறோம்.

***

இது மாதிரியான அதிரடியான படங்களை சில வருடங்களாக பார்ப்பதை தவிர்க்கிறேன். ஏனென்றால், அதிரடியான படங்கள் விறு விறு என நகருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மெதுவாக நகர்பவை. அதனால், நல்ல படங்களை பார்ப்பதற்கான பொறுமையை காலி செய்துவிடுகிறது. இந்த படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு, இது தான் முக்கிய காரணம்.

****