Thursday, January 5, 2012

நொந்தகுமாரனின் பக்கங்கள் - பறவையைப் போல!


வாழ்வில் பிடித்தமானவைகளில் முதன்மையானது பயணம். பல ஊர்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன். இன்னும் பல ஊர்களுக்கு செல்ல, ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். எங்கேனும் செல்ல.. ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும், போய்விடுவேன். குட்டையைப் போல ஓரிடத்தில் தேங்காமல் நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

பயணம் சுகம் என்றால், பயண சுமைகள் எப்பொழுதுமே தொல்லை. பயணத்தின் சந்தோஷங்களை சுமைகள் எப்பொழுதும் அழுத்திக்கொண்டே இருக்கும். பெருநகரத்திற்கு வாழ்க்கை நகர்ந்த பிறகு, இயல்பாகவே சில ஆண்டுகளில் பொருட்சுமைகளும், மனச்சுமைகளும் அதிகரித்திருக்கின்றன. பர்ஸ், சில வங்கி அட்டைகள், செல்போன், அழுத்தம் என நிறைய! முன்பெல்லாம் பயணத்தில் அசதியாயிருந்தால் சட்டென்று கண்ணயரலாம். இப்பொழுது அப்படி வாய்ப்பே இல்லை. சுமைகள் இல்லா பயணம் நிறைவேறாத கனவை போல இருக்கிறது!

இன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக எந்த சுமையும் இல்லை. சுமைகள் இல்லாத பறவையை போல சட்டென்று உணர்ந்தேன். சந்தோஷமாய் விசிலத்தபடியே கிளம்பி கொண்டிருந்தேன்.

வெளியே கால் வைக்க போகும் பொழுது, அலைபேசியில் அழைப்பு வந்தது. ஊரிலிந்து நண்பன். ஊருக்கு தான் கிளம்புகிறேன் என்றதும், கடந்த முறை தான் தவறவிட்டு வந்த இரண்டு டிசர்ட்டுகளை மறக்காமல் எடுத்துவா! என கட்டளையிட்டான். பறவை, கனவு என்றெல்லாம் சொன்னால், மூன்று மாதத்திற்கு கிண்டலுக்கான சரக்காக்கிவிடுவான். சரியான நக்கல் பேர்வழி. வாயே திறக்கவில்லை. சோகமாக இரண்டு டிசர்ட்டுகளை தேடிப்பிடித்து, ஒரு பேக்கில் போட்டுக்கொண்டேன். கிளம்பிவிடலாம். இருந்தால், இன்னும் சுமையேற்றிவிடுவார்கள் என பயம் வந்தது.

சென்னை போக்குவரத்தில் சிக்கி, சின்னாபின்னாமாகியும் 20 நிமிடத்திற்கு முன்பாக இரயில் நிலையம் வந்துசேர்ந்தேன். கொஞ்சம் பசித்தது. இரயில் உணவு நினைவிற்கு வந்து பயமுறுத்தியது. நாலு இட்லிகள் வாங்கிகொண்டேன். பக்கத்தில் புத்தககடை பரபரப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் 2011 நினைவுகளை கிளறியிருந்தது. வாங்கிகொண்டேன். தீராநதியில் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் விரிவான பேட்டி வந்திருந்தது. வாங்கிகொண்டேன். இனியும் நின்றால், புத்தக சுமை கூடும் என பயந்து கிளம்பினேன்.

இரயில்வே ஏற்பாடு செய்திருந்த ரூ. 5க்கு ஒரு போத்தல் தண்ணீர் வாங்கி கொண்டேன். மனிதர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு டிராலி நிறைய பயண லக்கேஜ்கள். அதில் ஒரு குட்டிப்பெண் காலை ஆட்டி அமர்ந்திருந்தது.

கோச்சுக்கு வந்து சேர்ந்தேன். போய் இருக்கையை தேடிப்பிடித்து, உட்கார்ந்து நிமிர்ந்தால் மோகன் அமர்ந்திருந்தான். எனக்கு தட்கல் இருக்கை புக் பண்ணி தந்தவன்.

"ஊரிலிருந்து போன் வந்தது. அம்மாவுக்கு மருந்து கிடைக்கலையாம். அது தான் அலைந்து திரிந்து, 4 பாட்டில்கள் வாங்கிவிட்டேன். ஊரில் இந்த முறை பனி அதிகமாம். அம்மாவுக்கு குளிர் தாங்கலையாம். அதனால் இந்த் ஸ்வெட்டர்.. கம்பெனியில் டைரி தந்தார்கள். நான் எந்த காலத்துல எழுதினேன்! உனக்கு பயன்படும் வச்சுக்க!" என எல்லாவற்றையும் தந்தான்.

"வேற ஏதும் இருக்காடா! மறந்துற போற!" என்றேன். "அவ்வளவு தாம்பா!" என்றான் சீரியசாய்! விடைபெற்று போனான்.

எல்லாவற்றையும் எடுத்து பேக்கில் பத்திரப்படுத்தினேன். வழக்கத்தை விட அதிகமான பொருட்கள் சேர்ந்துவிட்டன. சிரித்துக்கொண்டேன். வானம் பார்த்தேன். அந்த இருட்டில் ஒரு குட்டி வெண்மேகம் பறவையைப்போல லேசாக மிதந்து போனது. பொறாமையாய் இருந்தது.

சுமைகள் இல்லா பயணம் பறவைக்கு வாய்க்கும்! மனிதனுக்கு சாத்தியப்படாது! அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் (!), பறவையாய் பிறக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

பெரிய சத்தத்தோடு வண்டி நகர ஆரம்பித்தது.

7 comments:

Anonymous said...

:(

ADMIN said...

நல்லதொரு அனுபவப் பகிர்வு.. !! படைத்தவிதம் அருமை..!!

Anonymous said...

:)

முகமூடியணிந்த பேனா!! said...

//பயணம் சுகம் என்றால், பயண சுமைகள் எப்பொழுதுமே தொல்லை. பயணத்தின் சந்தோஷங்களை சுமைகள் எப்பொழுதும் அழுத்திக்கொண்டே இருக்கும்.//

பயணிகளாக பிடிக்கும் மனிதர்கள் அனைவர்க்கும் பிடித்த விடயம்! சொன்ன விதம் அழகு!

Anonymous said...

மிகவும் அருமை,நான் என் பயணங்களில் இதை உணர்ந்திருக்றேன்,சுமைகளை தவிர்க்கவும் முயன்றிருக்கிறேன் அனேக சமயங்களில் முடியவில்லை.

நவீன்.

குமரன் said...

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட தங்கம் பழனி, முகமூடியணிந்த பேனா மற்றும் அனானி நண்பர்களுக்கு நன்றி.

Thoduvanam said...

ரொம்ப நொந்து போய் எழுதி இருக்கீங்க.நிச்சயமா அடுத்த பிறவியில் பறவையாய் பிறக்க பறக்க வாழ்த்துக்கள்.ரசித்துப் படித்தேன் .