Thursday, April 12, 2012

பெயர் தெரியாத படம்!


அது ஒரு சுவாரசியமான படம். மெல்லிய உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறும்படம் / படம் குறித்த ஒரு சிறு குறிப்பை வாசித்தேன். அந்த கதை என் நெஞ்சில் பல ஆண்டுகளாக இருக்கிறது. உங்களுடன் பகிர்கிறேன். படத்திற்கான சுட்டி கிடைத்தால், எனக்கு தாருங்கள். சந்தோஷப்படுவேன்.

****

ஒரு இளைஞன். விரைவில் பிரபலமாகவேண்டும் என்பது அவன் கனவு. அதற்காக ஒரு 'பிரேக்' தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

ஒரு இளம்பெண். வேலைக்கு போய்கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு விசேஷ பிரச்சனை. அவளின் மார்பு மிகப்பெரியது. அதனால் பழகுகிறவர்கள் கண்பார்த்து பேசுவதை விட, நெஞ்சு பார்த்து தான் பெரும்பான்மையான ஆண்கள் பேசுகிறார்கள். நொந்து போகிறாள். மனசு பார்த்து பழக ஒரு நல்ல துணை தேடிக்கொண்டிருக்கிறாள்.

இந்த இளைஞனும், இளம்பெண்ணும் ஒரு லிப்டில் வெளியேறும் பொழுது, இருவரும் எதிரெதிரே மோதிக்கொள்கிறார்கள். ( இருவருக்கும் காதல் வந்துவிடும் என நினைத்தீர்கள் என்றால், நீங்கள் நிறைய தமிழ் படம் பார்த்து கெட்டு போயிருக்கிறீர்கள் என முடிவு செய்துகொள்ளலாம்.) இதில் இந்த பெண்ணின் மார்பு அவனுக்கு இடம் பெயர்ந்துவிடுகிறது.

இருவரும் வீடு திரும்புகிறார்கள். இவளுக்கோ அப்பாடா! ரெம்பவும் தொல்லைப்படுத்திய மார்பு தொலைந்தது! என நிம்மதி கொள்கிறாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுகிறவர்கள் கண் பார்த்தே பேசுகிறார்கள்.

வீடு சென்ற அவனோ, மார்பு பார்த்து அதிர்ச்சியடையாமல், இதை வைத்தே பிரபலமாகிவிடலாம் என திட்டமிட்டு, ஒரு 'அழகிய' மாடலாகிறான். அவன் ஆசைப்படி, விரைவில் பிரபலமடைந்துவிடுகிறான்.

இறுதியில் எப்படி கதை முடியும் என்பது எனக்கு மறந்துவிட்டது. நீங்கள் கண்டுபிடித்து சொன்னால், எல்லோருமே முடிவை தெரிந்துகொள்ளலாம்.

****

தமிழ்நாட்டில் இது ஒரு பிரச்சனை தான். பெண்களை உற்றுப்பார்க்கும் கெட்ட பழக்கம் பலரிடமும் இருக்கிறது. பெரிய மார்பு கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான். சமீபத்தில் வேலை நிமித்தமாய் மும்பை சென்றிருந்தேன். கடைசி நாளில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நண்பனுக்காக காத்திருந்த பொழுது தான், கவனித்தேன். ஆச்சர்யமாயிருந்தது. அங்கு யாரும் துப்பட்டா அணியவில்லை. அங்கு மட்டும் ஆண்களின் பார்வை மேம்பட்டுவிட்டதா என்றால், அப்படியும் சொல்லமுடியாது. பார்க்கிறவன் சாக்கு போட்டு பொத்தினாலும் பார்க்கத்தான் செய்வான். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துபோய்விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார்களோ!

பெண்களை உற்றுப்பார்ப்பது என்பது ஒரு சமூக பிரச்சனை. இங்கு கல்லூரி வரைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக கல்வி நிலையங்கள் இருப்பதே ஒரு பிரச்சனை தான். இயல்பாக பழக விட்டால் தானே, ஆண், பெண் கூச்சம் போகும். சாதி, மதம் மேலோங்கியுள்ள நமது சமூகத்தில், பெண்களை கண்கொத்தி பாம்பாக கவனித்து, சொந்த சாதியில்/மதத்தில் கல்யாணம் பண்ணி கொடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். மேலும், நமது ஊடகங்கள், திரைப்படங்கள் எல்லாம் பெண்களை ஒரு சரக்கை விற்கும் பொருளாக தான் பார்க்கின்றன.

மருத்துவர் காமராஜ் என்ன சொல்கிறார் என்றால், மார்பு என்பது குழந்தைக்கு பால் கொடுக்கும் உறுப்பு. அதனுடைய தேவை அவ்வளவு தான். அதை செக்ஸ் உறுப்பாக தவறாக பார்க்கிறார்கள் என்கிறார்.

எனக்கும் கூட டீனேஜை கடக்கும் பொழுது இந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். பின்னாளில் நல்ல புத்தகங்களின் வாசிப்பு, தோழிகளுடான பழக்கம், முற்போக்கு இயக்கங்களின் அறிமுகம் கிடைத்த பொழுது தான் பார்வை மாறியது.

****

2 comments:

Anonymous said...

test

STARWIN said...

சோதனைகளை தாண்டி சாதனை படைத்ததவரா நீங்கள்