Saturday, March 22, 2014

பகத்சிங்கை வாசியுங்கள்! மற்றதை அவன் பார்த்துக்கொள்வான்!

கடந்த 2009ல் பகத்சிங்கின் நினைவுகளில் இட்ட பதிவை நினைத்துப் பார்க்கிறேன்.

எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டு...
சராசரி மனிதனாய்
வாழமுடிகிறது!

உனது சுட்டெரிக்கும்
பார்வையையும்
உன் வாழ்க்கை
எனக்குள் எழுப்புகிற
குடைச்சல்களை தான்
என்னால்
என்றும்
எதிர்கொள்ள முடியவில்லை!

***

பகத்சிங்
பிறந்தது : 27.09.1907
தூக்கிலிடப்பட்ட நாள் : 23.03.1931 (வயது - 23)

***
கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த வரலாறுகளில் மிகுந்த மன எழுச்சியை தந்தது பகத்சிங் மற்றும் அவர்களுடைய தோழர்களின் வரலாறு தான்!

சூரியன் மறையாத சம்ராஜ்யம் எங்களுடையது என பெருமை பீத்திய வெள்ளை அரசாங்கம், பகத்சிங், சுகதேவ், இராஜகுரு மூவரையும் மறுநாள் காலை  தூக்கில் போடுவதாக அறிவித்துவிட்டு, எழும் போராட்டங்களுக்கு தனது அரசாங்கம் தாங்காது என பயந்து முதல்நாள் மாலையிலேயே தூக்கில் போட்டது!  உடல்களை கூட உறவினர்களுக்கு தராமல், திருடனைப் போல இரவோடு இரவாக நதிக்கரையில் உடல்களை எரித்தது.

ஒருமுறை ஒரு அரசியல் ஏட்டைப் பற்றி ஒருவர் சொல்லும் பொழுது, இந்த புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு, எளிதாக கடந்து போய்விடமுடியாது.  தீயை முழுங்கியது போல, சும்மா இருக்கவிடாது! என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் பகத்சிங்கின் வாழ்க்கைக்கு மிக சரியாக பொருந்தும்! 

பகத்சிங்கை வாசியுங்கள்! பிறகு உங்களால் பழைய சுயநலமான வாழ்க்கையை தொடரமுடியாது! உங்கள் வாழ்க்கையின் திசையை சரியாக கொண்டு செலுத்துவான்!


நாளை அவர்களுக்கு நினைவு நாள்! பகத்சிங்கும் அவர்களுடைய தோழர்களும் கண்ட கனவை நனவாக்குவோம்!

No comments: