Friday, April 11, 2014

மான் கராத்தே – விமர்சனமல்ல!



புருஷ்லீ, ஜாக்கிசான் படங்கள் பார்த்து வளர்ந்த ஆட்களில் நானும் ஒருவன்.  இன்றைக்கும் ஏதாவது ஒரு சானலில் தற்செயலாய் இருவரது படங்களையும் பார்த்துவிட்டால், முடியும்வரை பார்த்துவிட்டு தான் தூங்கப்போவேன்.  சண்டையும், நகைச்சுவையும், சாகசமும் நிறைந்த ஜாக்கிசான் படங்கள் மிக விருப்பமானவை.


மற்ற மார்ஷியல் ஆர்ட்ஸை விட கராத்தே பிடித்ததற்க்கு காரணம். அதில் தான் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக எதுவும் இல்லை.  கை,காலை வைத்தே சண்டையிட்டு விடலாம்.


எப்பொழுதாவது தோணும் பொழுது, ரேஸ்கோர்ஸ் பக்கம் போவதுண்டு.   காலை 6 மணிக்கே நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஓடுவதும், குதிப்பதும், எசகுபிசகான  வார்ம் அப்களை செய்துகொண்டும் இருப்பார்கள்.  பார்க்க ஜாலியாக இருக்கும்.  அப்படி கராத்தேவும் சிலர் கற்றுக்கொண்டிருந்தனர்.  ஒருமுறை நண்பன் ஒருவன் கராத்தே குழுவில் இருந்ததைப் பார்த்து, நானும் சேர்ந்து, இரண்டொரு நாள் போய், ஆ, ஊ என என சில வார்ம் அப்களை செய்தேன்.  அதற்குப் பிறகு சில காரணங்களால் தொடரமுடியவில்லை. கராத்தே ஏக்கமாகவே இருந்தது.


இரண்டு வருடங்கள் கழித்து, வெளியூரில் சில காலம் வேலைக்காக ஒரு பள்ளியில் தங்கியிருந்தேன். காலை 5 மணிக்கே ஆ! ஊ! என சத்தம் வரும்.  எழுந்துப் பார்த்தால் கராத்தே தான்! 5ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து இருப்பார்கள்.  வெட்கப்படாமல் நானும் சேர்ந்துவிட்டேன்.  முதல் மூன்று, நான்கு நாட்கள் கொடுத்த பயிற்சியில் என்னால் நடக்கவே முடியவில்லை. ஊர்ந்து போனேன் என்று தான் சொல்லமுடியும். மூன்று மாதம் முடியும் பொழுது, அடிப்படையை கொஞ்சம் தாண்டியிருந்தேன்.  இன்னும் 10 நாட்கள் இருந்தால், மஞ்சள் பெல்ட் வாங்கியிருந்திருப்பேன். (அதுதான் முதல் பெல்ட் என நினைக்கிறேன்.) அந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டிய நெருக்கடியில் கிளம்பிவிட்டேன். கிளம்புகிற அன்று மாஸ்டர் சொன்னார்.  “நீங்கள் கற்றுக்கொண்டதை வைத்து, ஒரு ஆளை உயிரிழக்க செய்யலாம். ஜாக்கிரதை” என்றார். கராத்தே மீது முதல் முறையாய் கொஞ்சூண்டு பயம் வந்தது.


அதற்கு பிறகு கராத்தே கனவில் மட்டும் தான். பலரும் சூழ்ந்துவிட ஜாக்கிசானை விட வேகமாக சண்டை போட்ட காலங்கள் உண்டு. 


ஒருநாள் பொது விசயத்திற்காக நண்பர் ஒருவர் சிறை செல்ல, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சிறை வாசலில் காத்துகொண்டிருந்தோம்.  அப்பொழுது பேசிய பல விசயங்களில் கராத்தேவும் வந்தது.  கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார்கள்.  அவருக்கு தலையில் காயம்பட்டிருந்தது.  என்ன ஆச்சு? என்றதற்கு,  ஏரியாவில் ஒரு பொதுப்பிரச்சனை.   நாலைந்து பேர் ரவுண்டு கட்டிவிட்டார்கள் என்றார். 


”அப்ப கராத்தே?” என்றேன் வியப்பாய்!


பக்கத்தில் இருந்த நண்பர் “மான் கராத்தே தான் எப்பவும் பெஸ்ட்” என்றார்.


’அது என்ன ஸ்கூல் ஆப் ஸ்டைல்?’ என்றேன் அப்பாவியாய்!’


"தலை தெறிக்க ஓடுறதப்பா!" என்றார்கள். வெட்கமாக போய்விட்டது.

நேற்று ஒரு கனவு வந்தது. நிறுத்தி வைத்திருந்த வண்டியை ஒரு பையன் தள்ளிவிட்டுவிட, வண்டியிலிருந்து பார்ட்ஸ் கழன்றுவிட்டது.  அதை அந்த பையனின் அப்பாவிடம் வாங்கித்தர கேட்கும் பொழுது சண்டையாகி, செமத்தியாய் அடித்துவிட்டேன். (விடிகாலையில் யோசித்துப்பார்த்தால், அது என் வண்டியே கிடையாது!)


இது நடந்து கொஞ்ச நேரத்தில், ஒரு மஸாஜ் செண்டரில் ஏற்கனவே அடிவாங்கிய பையன் ஒருவன், வளர்ந்து பெரியவனாகி “ஏற்கனவே புரட்டி எடுத்தியே! உன்னை விட மாட்டேன்! என சொல்ல கெஞ்சி கூத்தாடி அங்கிருந்து வெளியே நைசாக நழுவி, ஓடியே போய்விட்டேன்.


அதனால் எப்பொழுதும் ‘மான் கராத்தே’ தான் பெஸ்ட்! :)

No comments: