Wednesday, April 16, 2014

RIO 2 - ஒரு பார்வை!


RIO (2011) முதல் பாகம் பிடித்துப்போனதில், அண்ணன் பையன் இரண்டாவது பாகத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தான்.  நேற்று இருவரும் பார்த்தோம்.

முதல் பாகத்தில் பல மோதல், கலாட்டாக்களுக்கு பிறகு இணைகின்ற நீல வண்ண கிளிகள் மூன்று குழந்தைகளோடும், லிண்டாவும், மருத்துவரும் இணைவதோடும் படம் முடியும்.

இந்த பாகத்தில், லிண்டாவும், மருத்துவரும் அரிய வகை இனமான நீல வண்ணக் கிளியின் இனத்தைத் தேடி அமேசான் காடுகளில் தேடுகிறார்கள்.  அங்கு ஒரு நீலவண்ண இறகை கண்டுபிடித்ததும் நம்பிக்கையுடன் சுற்றுகிறார்கள்.  

நகர வாழ்க்கையின் சகல வசதிகளோடும், Bluவும் அதன் குழந்தைகளும் பக்காவாக செட்டிலாகியிருக்கிறார்கள்.  ஆனால், இந்த நகர வாழ்க்கையை விட்டுவிட்டு, காட்டில் தன் சொந்தங்களோடு வாழவேண்டும் என Jewelக்கு நீண்டநாள் ஆசை.  லிண்டாவிற்கு உதவ Blu தன் குடும்பத்தோடும், நண்பர்களோடும் அமேசான் காடுகளுக்கு பயணிக்கிறார்கள்.

அமேசானில் தன் இனத்தை ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கிறார்கள்.  அங்கு Jewel தனது சொந்தங்களை பார்த்ததும், குதூகலிக்கிறது. தனது நீண்ட நாள் கனவு வாழ்க்கை கிடைத்ததும் மிகவும் சந்தோசப்படுகிறது. . நகரத்திற்கு செல்லாமல், அங்கேயே இருந்துவிட ஆசைப்படுகிறது.  பிள்ளைகளும் அங்கு இயல்பாய் செட்டிலாகிறார்கள் ஆனால், துவக்கத்திலிருந்தே வீட்டில் வளர்ந்த Blu விற்கு மட்டும் காட்டில் வாழ்வது சிரமமாக இருக்கிறது.  Blu வை அந்த குழுவில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறார்கள்.

இதற்கிடையில், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டும் கும்பல் தங்களுக்கு தடையாக வரும் லிண்டாவையும், மருத்துவரையும் விரட்ட நினைக்கிறார்கள்.  கடந்தமுறை Blu விடம் தோற்று பலத்த அடி வாங்கி, பறக்க முடியாத ஆந்தையும் பழிவாங்க அங்கு வந்துசேர்கிறது.

காட்டை அந்த கும்பலிடமிருந்து காப்பாற்றினார்களா? Bluவை அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்களா? என்பது கடைசியில் சில கலாட்டக்களுடன் சொல்லியிருப்பது மிச்ச சொச்ச கதை!

******

முதல் பாகம் காதல், மோதல், சேஸிங் என விறுவிறுப்பாய் இருந்தது.  திரைக்கதையும் நல்ல கிரிப்பாக இருந்தது.  இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் வேகத்தை பாதியை மட்டும் தான் கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தில் மூன்று பாடல்களை முதல் பாகம் போலவே சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்கள். 

சொந்த ஊரை, சொந்த பந்தங்களை விட்டுவிட்டு வாழும் பலருக்கும் Jewel ஐ போலவே ஆசை இருக்கிறது. எனக்கு அந்த ஆசை நிறைய இருக்கிறது. தன்னுடைய இடத்தில் சகல வசதிகளோடும், சுதந்திரமாகவும் வாழ்ந்த ப்ளுவிற்கு இங்கு புதிய இடத்தில் நிரூபித்தாகவேண்டிய கட்டாயம்.  அதற்காக தன்னை வருத்திக்கொள்கிறது.   இங்கு ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் ஏற்படுகிற நெருக்கடி. :)

முதல் பாகத்தை இங்கிலீசில் தான் பார்த்தோம்.  ஆனால், இந்த பாகத்தை வெளியிடும் பொழுதே, தமிழிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால், சென்னையில் கமலா திரையரங்கில் நாலு நாட்கள் மட்டும் அதுவும் ஒரே ஒரு ஷோ மட்டும் தமிழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு, கொளத்தூரில் கங்கா திரையரங்கில் இரண்டு காட்சிகள் மட்டும் தமிழில்! அந்தளவிற்கு பெருநகரத்தில் ஆங்கிலம் கோலோச்சுகிறது! கொடுமை!


இதற்காக கங்கா திரையரங்கைத்  தேடிப்போனால், திரையரங்கு புதிது போல தான் இருந்தது. டிக்கெட் பணம் ரூ. 100 இருந்தாலும், சவுண்ட் சிஸ்டம் சுத்தமாய் சரியில்லை. படம் போட்டு, 5 நிமிடம் கழித்து, நான் நேரே போய் சொல்லிவிட்டு வந்தேன். சரி செய்யவில்லை.  திரையரங்களில் எல்லோரும் கரச்சல் கொடுத்ததும் கொஞ்சம் சரிசெய்தார்கள். படத்தின் உற்சாகத்தை பாதியாக்கியதில், இவர்களின் பங்கு அதிகம். ஏசியை பெயரளவிற்கு போட்டிருந்தார்கள்.  திருட்டி டிவிடியில் பார்க்காமல், ஏன் திரையரங்கிற்கு வருகிறீர்கள்? என கேட்பது போல் இருக்கிறது! L

1 comment:

karai ks vijayan said...

இப்ப நீங்க எல்லாரையும் நொந்த குமாரனாக்கப்போறீங்கதானே...............????