Monday, June 2, 2014

’Easy Money’ யும், ’என்னமோ நடக்குது’ நாயகனும்!




பொதுவங்கியின் பணத்தை சட்டத்துக்கு புறம்பாக காலையில் நகர்த்தி, பல கந்துவட்டி ஏஜெண்டுகளுக்கு தந்து, மாலையில் ‘பாதுகாப்பாக’ வங்கியில் சேர்த்துவிடுகிறார்கள். வட்டியை பிரித்துக்கொள்கிறார்கள்.

சுவரொட்டி ஒட்டும் இளைஞன்.  காதல்வயப்படுகிறார். காதலிக்கு ரூ.5 லட்சம் உடனடிப் பிரச்சனை. தீர்ப்பதற்காக, அந்த மாபியா கும்பலிடம் வேலைக்கு செல்கிறார்.

வேலைக்கு சேர்ந்த ஐந்தாம் நாள் ரூ. 5 லட்சம் பெற்று பிரச்சனையை தீர்த்துவிடலாம் என இருக்கும் பொழுது, பணப்பட்டுவாடாவின் பொழுது, ஒரு கும்பல் பணத்தை கடத்திவிடுகிறது.  பணத்தை அமுக்கிவிட்டதாய் மாபியா கும்பல் துரத்துகிறது. 

நாயகன் பிரச்சனையிலிருந்து மீண்டாரா? காதலியை காப்பாற்றினாரா? என்பது சொச்சக்கதை!
****

ரகுமான் ஒரு மாபியா மற்றும் அரசியல்வாதி.  இவரை பழிவாங்க இருக்கும் பிரபு. இருவரையும் மோதவிட்டு, 20 கோடியை இறுதியில் அபேஸ் செய்கிறார்.

கடந்த காலங்களில் இந்த மாதிரி கிடைக்கும் பணத்தை, நேர்மையாக அரசிடம் ஒப்படைப்பார்கள்.  மங்காத்தாவிற்கு பிறகு, இவர்களே வைத்துக்கொள்கிறார்கள்.

படத்தில் மாபியா கும்பலில் நாயகன் ஒரு ஆள் எல்லாம் கிடையாது.  சாதாரண குடும்பத்து ஆள்.  அதிகப்பட்சமாய் 5 நாள்கள் மட்டுமே மாபியா கும்பலோடு தொடர்பு.  அதற்குள் 20 கோடியை வைத்துக்கொள்ளும்ம் சிந்தனை எப்படி வந்தது?

“சுலபமாய் பணம் சம்பாதிப்பது எப்படி?” என சமூகத்தை தள்ளிக்கொண்டு போகிறவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு இது!

இனி, விடிகாலையில் செய்தித்தாளைப் போட்டு, ஊறுகாய் விற்று, முன்னேறும் விக்ரமன் கதாநாயகன்கள் எல்லாம் ‘ஏமாளிகளாக/பிழைக்க தெரியாதவர்களாக’ தெரிவார்கள். 

’மங்காத்தா’ அஜித், ‘என்னமோ நடக்குது’ வசந்த் எல்லாம் ’வளர்ச்சியின்’ நாயகர்களாக வலம் வருவார்கள்!

*****
மற்றப்படி, படத்தில் நிறைய ஓட்டைகள்.  எல்லாம் கணிணிமயமாய் இருக்கும் பொழுது, பல கோடிகளை இப்படி நகர்த்துவது எல்லாம் எளிது அல்ல! அதெல்லம் ஹர்சத் மேத்தா காலம்!பல கோடி ரூபாயை புதிதாய் சேர்ந்த நபரிடம் தந்து அனுப்புவதெல்லாம் அபத்தம்! எம்.ஜி.ஆர் காலத்தில் அராஜகமாய், அரசியலில் நுழையும் நபர், பல ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் எம்.எல்.ஏ கூட ஆகாதெல்லாம் நம்பும்படியாக இல்லை!