Wednesday, June 18, 2014

Orphan 2009 – எஸ்தரின் ரகசியம்






நீண்ட நாள்களுக்கு பிறகுப் பார்த்த ஒரு நல்ல சைக்காலஜிகல் ஹாரர் திரில்லர் படம்.

கதை எனப் பார்த்தால், அந்த தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை இறந்தே பிறக்கிறது.  மன உளைச்சலிருந்து தப்பிக்க மதுவை நாடுகிறாள்.  மருத்துவருடன் ஆலோசனை செய்ததில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கலாம் என முடிவு செய்கிறார்கள்.   அந்த அனாதை இல்லத்தில் புத்திசாலித்தனமாய் பேசும், அசத்தலாய் ஓவியம் வரையும் 9 வயது எஸ்தரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

புதிய சகோதரியை மூத்த மகன் டேனியல் ஏற்க மறுக்கிறான்.  காது கேட்காத, வாய் பேச முடியாத குட்டிப்பெண் மேக்ஸ் எஸ்தருடன் ஒட்டிக்கொள்கிறாள்.  பள்ளியில் நக்கலடித்த பெண்ணை எஸ்தர் உயரத்திலிருந்து தள்ளிவிடுகிறாள்.  தன்னைப் பற்றி போட்டுக் கொடுக்க வந்த இல்லத்தின் நிர்வாகியான சிஸ்டரை சுத்தியலால் அடித்தே கொன்றுவிடுகிறாள். இந்த கொலையை துப்பறியும் சிறுவன் டேனியலை கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து தப்பித்து மருத்துவமனையில் சேர்த்தால், அங்கும் கொல்ல முயற்சி செய்கிறாள்.

இப்படி தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை எஸ்தர் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். கொடுமை கொடுமைன்னு நிம்மதி தேடி கோயிலுக்கு போனால். அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பார்கள். அது போல நிம்மதி இழக்கிறார்கள்.

ஏன் எஸ்தர் இப்படி நடந்துகொள்கிறாள் என்பதை சில விவரங்களுடனும், பரபரப்பான காட்சிகளுடனும் இறுதி அரைமணி நேரத்தில் சொல்லி முடிக்கிறார்கள்.

****

எஸ்தரும், குட்டிப்பெண்ணும் நடிப்பில் அப்படியே அள்ளுகிறார்கள். எஸ்தர் நம்மை பார்க்கும் பொழுது, நம்மையே ஊடுருவுகிற பார்வையாக இருக்கிறது! கன்ஜூரியங் படத்தில் வரும் Vera Farmiga அம்மாவாக அருமையாக நடித்திருக்கிறார். பேய்ப்படம் ஸ்பெலிஸ்ட் ஆகிவிட்டார் என நினைக்கிறேன்.

பேய்ப்படமாக எடுத்திருக்க வேண்டிய படத்தை, சந்திரமுகி போல விஞ்ஞான விளக்கம் தந்து, திரில்லர் வகையாக எடுத்திருக்கிறார்கள்.  எஸ்தரின் இன்னொரு பரிணாமத்தை படம் இறுதியில் சொல்லும் பொழுது, மேக்கப் அவர்கள் சொல்வதை நம்ப வைத்திருக்கிறது!

சிக்கலான எஸ்தர் ரசியாவிலிருந்து வந்ததாய் சொல்கிறார்கள். ரசியா மீதான 
அமெரிக்கர்களின் வெறுப்பை இதிலும் காட்டியிருக்கிறார்கள்.

அதென்ன அனாதை இல்லத்தின் நிர்வாகியை எல்லா படத்திலும் போட்டுத்தள்ளுகிறார்கள். எவ்வளவு வெறுப்பு அவர்கள் மீது!

ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைத்தால், இத்தனை அக்கப்போரா என பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பொழுது போக ஒரு நல்லப் படம்! பாருங்கள்! குழந்தைகளை தவிர்த்துவிட்டு பாருங்கள்!

No comments: