Friday, August 8, 2014

விபத்தும் கட்டுப்பாடுகளும்!





காலை 8.40 போல அந்த தனியார் பள்ளியை கடக்கும் பொழுது, திடீரென்று மின்னல் வேகத்தில் பள்ளியிலிருந்து வந்த ஒரு சிறுவன் என் பைக்கின் மீது மோதினான்.  நான் மெதுவாக வந்ததால், இருவருக்குமே எதுவும் காயமில்லை.  நான் திடீரென பிரேக் போட்டதால்,  பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதாலும் பைக் சரிந்துவிட்டது.  நான் வண்டியை தூக்கி நிறுத்தி திரும்ப கிளம்ப எத்தனிக்கும் பொழுது, அதே பையன் அதே வேகத்தில் பள்ளிக்குள் ஓடினான்.  மறந்து போன பெல்ட்டை எடுத்துக்கொண்டு  ஓடுவதாக யாரோ சொன்னார்கள். நடந்த நிகழ்வால், உடலில் கொஞ்சம் பதட்டம் வந்திருந்தது!

அந்த பையனுக்கு 12 அல்லது 13 வயதாவது இருக்கும். சாலையை கடக்கும் பொழுது இருபுறமும் அவனை பார்க்கவிடாமல் தடுத்தது எது?  பெல்ட் போடவில்லை என்றால், பள்ளியில் தணடிப்பார்கள் என்ற எண்ணம் தான் பிரச்சனை.  இன்றைக்கு ஒருவேளை நான் வேகமாக வந்திருந்தால், அந்த பையனின் நிலை?  என மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.

மாலை 3.30 போல பள்ளியை கடக்கும் பொழுது, நேரே போய் தலைமை ஆசிரியரிடம், காலையில் நடந்ததை சொல்லி, பள்ளிக்கு வந்துவிட்டால், நீங்கள் தான் பொறுப்பு. நீங்கள் எப்படி வெளியே அனுப்பலாம்?  அந்த பையனை தண்டிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை! என்றேன்.

உடனே அந்த பையனின் தோற்றம், வயதை என்னிடமே கேட்டு, யார் என விசாரித்து, இரண்டு நிமிடங்களில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.. காலையில் ‘அங்கிள் வண்டியில் மோதினாயா?’ என்றதற்கு தலையை குனிந்து ’ஆமாம்’ என்றான். ’மிஸ்கிட்ட கேட்டுட்டு போனீயா?’ ‘ஆம்’ என்றான். ’அங்கிள் இப்ப வந்து உன் மீது கம்பளைண்ட் பண்ணவரலை. இப்படி சாலையை பார்க்காமல், ஓடிவந்தால், அடிப்பட்டுவிடுமே! என்று சொல்ல வந்துள்ளார். இனி கவனமாக போவியா?’ என்றதற்கு ‘சரி’ என்றான்.

"பள்ளி வந்த பிறகு, இனி யாரும் வெளியே போக கூடாது. தவிர்க்கமுடியாமல் போனாலும் கவனமாக போகவேண்டும் என மாணவர்களுக்கு தெரிவியுங்கள்” என்றேன். சரி என்றார்கள். வந்துவிட்டேன்.

அந்த தலைமை ஆசிரியரின் பார்வை, பேச்சு எல்லாவற்றிலும் கடுமை இருந்தது.  விட்டால், என்னையே கண்டிப்பார்கள் போல தோற்றம் இருந்தது. தனியார் பள்ளிகளில் தண்டிப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.  அதனால் தான் அந்த பையனுக்கு, சாலை தெரியவில்லை. வண்டி தெரியவில்லை. பெல்ட் மட்டும் தான் கண்ணில் நின்றிருக்கிறது!

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-